மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தனது “நண்பர்களுடன்” துப்பாக்கிகள் ஏந்திய புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததையடுத்து காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அந்த இளைஞர், தனது ஃபேஸ்புக் ஸ்டோரியில், AK-47 போன்ற துப்பாக்கிகளை ஏந்தியவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு, “பாகிஸ்தானி பையன்” என்ற தலைப்பைச் சேர்த்திருந்தார். சமீபத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த பின்னணியில் நாடு முழுவதும் பாதுகாப்பு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்த புகைப்படம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

புகைப்படங்கள் பற்றிய புகார்கள் உயர் அதிகாரிகளிடம் வந்தவுடன், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். அந்த வாலிபரை கிருஷ்ணா நகர் காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்த நிலையில் அவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். அதன்பிறகு இது பற்றி காவல்துறை கொடுத்த தகவலின் படி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக அவர் திருமணமான ஒரு இந்து பெண்ணுடன் ஓடிப்போனதால் கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பின்னர் அவர் கத்தாருக்கு வேலை தேடி சென்ற நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பினார். அவர் வேலைக்காக மும்பைக்கு சென்ற நிலையில், கடந்த மூன்று வருடங்களாக பெற்றோர்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் தான் இருக்கிறார். இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர் வெளிநாட்டுக்கு சென்ற போது தான் பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அந்த நபரின் செல்போன் அழைப்புகள் உள்ளிட்டவைகளை தொடர்ந்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்த விவகாரம் மத்திய உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களாலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.