
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி லெனின் தெருவில் வசித்து வரும் மேகலா என்ற பெண்ணுக்கு பரமேஸ்வரன் என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவன் மனைவி இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் இரண்டு ஆண்டாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். மேகலா தனது குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பரமக்குடி பாரதி நகர் பகுதியில் இருவரும் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்த நிலையில் இவர்களுக்குள் கடந்த ஒரு மாதமாக தகராறு ஏற்பட்டதால் மேகலா மணிகண்டன் உடன் பேசுவதை தவிர்த்து உள்ளார். இதனைத் தொடர்ந்து மணிகண்டன் மீது பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மேகலா புகார் அளித்த நிலையில் போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு மேகலா தன்னுடைய தாயார் வேலை பார்த்து வரும் பெரிய கடை பஜாரில் உள்ள கடை ஒன்றிய விற்பனைக்காக பணியாரம் சுட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மணிகண்டன் ஏன் என்னுடன் சேர்ந்து வாழ வர மறுக்கிறாய் என்று கேட்ட நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மேகலாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மேகலா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.