இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், 6 முறை பாஜக எம்பியுமாக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் என்பவர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கைகளும், விசாரணையும் மேற்கொள்ளவில்லை. இதனால் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், தினேஷ் போகத், சங்கீதா போகத் உள்ளிட்ட பல வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடந்த வருடம் பல மாதங்களாக டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையில் பாரீஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகரித்து இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தம் போட்டியில் இருந்து விலகி, பஜ்ரங் புனியாவுடன் காங்கிரஸில் இணைந்தார். எதிர்வரும் அரியானா சட்டமன்ற தேர்தலில் வினேஷ் போகத் போட்டியிடயிருக்கிறார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிஜ் பூஷண் 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்திய போது, நான் கூறினேன் இது முழுக்க முழுக்க அரசியல் சதி என்று, குறிப்பாக இது பூபேந்திர ஹூடா, தீபேந்திர ஹூடா,ராகுல் மற்றும் பிரியங்காவின் சதி. பஜ்ரங் மற்றும் வினேஷ் பெண்களின் மதிப்புக்காக போராடவில்லை, அரசியல் ஆதாயத்திற்காகவே போராடினார்கள். தற்போது அவர்கள் காங்கிரஸில் சேர்ந்தது மூலம் தெளிவாகியுள்ளது.

அவர்கள் அரியானாவில் எந்த தொகுதியில் நின்றாலும் ஒரு சிறு பாஜக வேட்பாளரே அங்கு வெற்றி பெறுவார். அதோடு ஒரு விளையாட்டு வீரர் ஒரே நாளில் 2 எடை பிரிவில் சோதனை பெற முடியுமா என்று நான் விணேஷிடம் கேட்க விரும்புகிறேன். எடை கூடிய பிறகு, 5 மணி நேரம் சோதனையை நிறுத்தி வைக்க முடியுமா?. நீங்கள் மல்யுத்தத்தில் வெற்றி பெறவில்லை, ஏமாற்றி அங்கு சென்று இருக்கிறீர்கள். இன்னொரு வீராங்கனைக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டிப்பறித்து சென்றுள்ளீர்கள். அதற்காக தான் கடவுள் உங்களை தண்டித்துள்ளார் என்றார்.