தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாகார்ஜுனா. இவர் தமிழிலும் பல படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது தனுஷ் நடித்து வரும் குபேரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் குபேரா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் நாகார்ஜுனா, நடிகர் தனுஷ் மற்றும் அவருடைய மகன் ஆகியோர் விமான நிலையத்திற்கு சென்றனர். அப்போது வயதான ரசிகர் ஒருவர் நடிகர் நாகார்ஜுனாவை சந்திப்பதற்காக ஓடி வந்தார். அப்போது பாதுகாவலர் வயதானவர் கூட என்று பாராமல் அவரை கீழே தள்ளிவிட்டார்.

இதை நடிகர் நாகார்ஜுனா மற்றும் தனுஷ் ஆகியோர்கள் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சென்று விட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் நடிகர் நாகார்ஜுனா அந்த பெரியவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து தற்போது நடிகர் நாகார்ஜுனா மன்னிப்பு கேட்டு ஒரு சமூக வலைதள பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், இந்த விவகாரம் இப்போதுதான் என்னுடைய கவனத்திற்கு வந்தது. இது போன்ற சம்பவம் நிச்சயம் நடந்திருக்கக்கூடாது. நான் அந்த ஜென்டில்மேனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாதவாறு பார்த்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர் வீடியோவையும் தனி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.