சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த 75 வயதான பெண் மருத்துவர் கௌரி, ஓய்வு பெற்ற அரசு மருத்துவராக இருந்தாலும், தற்போதும் தனியார் மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி வருகிறார். தனிமையில் வாழ்ந்துவந்த கௌரி, தனது சொத்துகளை வைத்துப் பொதுமக்களுக்கு உதவுவதற்காக மருத்துவமனை கட்ட தீர்மானித்தார்.

இதற்காக சங்கர் என்ற நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து உதவுவதாக நம்ப வைத்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் கட்டுமான நிறுவன நபர்களைத் தெரிந்தவர்களாகக் கூறி, அவரிடம் நம்பிக்கை ஏற்படுத்திய சங்கர், 24 லட்சம் ரூபாய் பணத்தை 2012ல் பெற்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து சோழிங்கநல்லூரில் உள்ள அவரது 7 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தினை மருத்துவமனைக்காக பயன்படுத்தலாம் என தெரிவித்த சங்கர், அதன் அருகிலுள்ள நிலத்தையும் வாங்க வேண்டும் என மேலும் பணம் பெற்றுள்ளார்.

வயதான காரணத்தால், கௌரி தனது பெயரில் சுகாதார அமைப்புகள், வங்கிக் கடன், கட்டுமான அனுமதி போன்றவற்றை சமாளிக்க முடியாது என கூற, பொது அதிகாரத்தை சங்கருக்கு வழங்கியுள்ளார். ஆனால் அதே நிலத்தை சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் பெயரில் பதிவு செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கௌரி, சங்கர் உள்ளிட்டவர்கள் தன்னை பலவிதமாக ஏமாற்றி ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துக்களை அபகரித்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளார்.

கொலை மிரட்டல்கள், போலி ஆவணங்கள், மற்றும் கையெழுத்துகள் ஆகியவற்றின் மூலம் ஏமாற்றி பணத்தை அபகரித்ததோடு, மீண்டும் திருப்பித் தருமாறு கேட்டபோது 3.10 கோடி மதிப்பிலான டம்மி செக்குகளை வழங்கி மீண்டும் ஏமாற்றி உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், பொய்யான ரூ.3 கோடி பணம் பெற்றதாக 20 ரூபாய் பத்திரத்தில் ஆவணம் தயாரித்தும் மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சங்கர், அவரது மனைவி புவனேஸ்வரி, மற்றும் மேலும் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் முதற்கட்டமாக சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கும்பல் இதேபோன்று பலரிடமும் சொத்துக்கள் மற்றும் பண மோசடி செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், மீதமுள்ள நபர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.