
டெல்லியில் மேற்கு பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் ஐஏஎஸ் பயிற்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. அம்மையத்தில் 30 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் அதீத கனமழையின் காரணமாக தரை தளத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பயிற்சி மையத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் தண்ணீரில் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இந்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மாணவர்களை மீட்க போராடினர். அப்போது துரதிஷ்டவசமாக 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் பயிற்சி மையத்தில் உள்ள சக மாணவர்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள தரை தளத்தில் செயல்பட்டு வந்த 13 சிவில் சர்வீஸ் கோச்சிங் சென்டர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்த நிலையில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் அறிவித்துள்ளார். போராடிய மாணவர்களை நேரில் சந்தித்து பேசிய அவர், சம்பவத்தை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த உயிரிழப்புக்கு காரணமான எவரும் தப்ப முடியாது என்று உறுதி அளித்துள்ளார்.