ஐபிஎல் 2025 சீசனில் ரசிகர்களை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம், 14 வயதான வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகம் தான். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தனது முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய இளம் வீரர், மிகுந்த தைரியத்துடன் விளையாடினார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில், அனுபவமிக்க ஷர்துல் தாக்கூருக்கு எதிராக தனது முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து ரசிகர்களையும், தரணியையும் அதிர வைத்தார்.

இந்த போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவர் தனது குறுகிய இன்னிங்ஸில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார். ஆனால், பெவிலியனுக்குத் திரும்பும்போது அவரது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. தனது முதல் ஐபிஎல் மேட்ச் எனும் மேடையில் காட்டிய விளையாட்டு ஆற்றலால் மட்டுமல்ல, தனது உணர்வுகளாலும் வைபவ், ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளார்.

 

வைபவ் சிக்ஸர் அடித்த அந்த தருணத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் லேசாக சிரித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இளம் வீரரை அணியில் சேர்க்க அவர் எடுத்த முடிவுக்கு இது ஒரு சரியான பதிலடி. “நம்பிக்கை வைத்தேன், அதற்கான பதிலளிப்பு கிடைத்தது” என்றதுபோல், டிராவிட்டின் முகபாவனைகள் சொல்லும்.

 

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் ₹1.10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இளம் வயதிலும், சர்வதேச தரத்தில் வெகுவாக விற்பனை செய்யப்பட்ட வீரராக அவர் இடம் பிடித்துள்ளார். வெறும் 14 வயதிலேயே இப்படியான அதிரடி அறிமுகம் கொடுத்துள்ள வைபவ், எதிர்காலத்தில் இந்திய அணிக்கான பெரும் நட்சத்திரமாக உருவெடுக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.