
தென்காசி மாவட்டத்தில் உள்ள நொச்சிக்குளம் கிராமத்தில் முத்துக்குமார்-மரிய ஆரோக்கிய செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த ஐந்தாம் தேதி முத்துக்குமார் மஞ்சள் காமாலை காரணமாக மயங்கி விழுந்து விட்டதாக மரிய ஆரோக்கிய செல்வி ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் அவரது வீட்டிற்கு விரைந்து சென்றது. இந்த நிலையில் ஆம்புலன்ஸ் செவிலியர் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு முத்துக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் முத்துக்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருந்ததால் சேந்தமரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முத்துக்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது முத்துக்குமார் வேலைக்கு செல்லாமல் குடிபோதையில் தினமும் தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மரிய ஆரோக்கிய செல்வி தனது 12 வயது மகனின் உதவியுடன் முத்துக்குமாரின் கழுத்தை நெரித்து கொலை செய்து நாடகமாடியது தெரியவந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையிலும் முத்துக்குமார் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனால் மரிய ஆரோக்கிய செல்வி மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.