
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் கம்பளம் என்ற பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நேற்று விடுமுறை தினம் என்பதால் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. அப்போது கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த 19 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் நாகர்கோவிலில் உள்ள தனது தோழியை பார்த்துவிட்டு பேருந்துக்காக கோட்டார் கம்பளம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது 28 வயதுடைய வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து மாணவியிடம் பேசத் தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் மாணவியை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அதன் பிறகு மாணவியை கீழே தள்ளிவிட்டு தாக்கிய நிலையில் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என மாணவி கத்தியுள்ளார். சத்தம் கேட்டு அங்கிருந்த சிலர் ஓடி வந்த நிலையில் அந்த வாலிபரை தடுக்க முயன்றனர். இருந்தாலும் தொடர்ந்து தாக்கிய அந்த வாலிபர் ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகமானதால் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றார். இதனைத் தொடர்ந்து காயமடைந்த மாணவி அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.