
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே டைகர்ஹில் பகுதியில் கார்த்தி (35)-அஞ்சலி மேரி (28) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு வயதில் மிருதுளா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இதில் கார்த்திக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஒரு பங்களா பராமரிப்பாளர் வேலை கிடைத்தது. இது சிங்கார தேயிலை எஸ்டேட் செல்லும் வழியில் உள்ளது. இதன் காரணமாக கார்த்தி தன் குடும்பத்துடன் அந்த பங்களாவுக்கு குடி பெயர்ந்தார். இந்த பங்களாவிற்கு முன்பாக தரை மட்டத்தில் ஒரு மீன் தொட்டி உள்ளது.
இந்நிலையில் நேற்று காலை குழந்தை மிருதுளா மீன்களுக்கு உணவு கொடுத்துக் கொண்டு அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை மீன் தொட்டிக்குள் தவறி விழுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்தி உடனடியாக தன் குழந்தையை மீட்டு ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.