தர்மபுரி மாவட்டம் சேசம்பட்டி சவுளூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(42).  அந்த கிராமத்தில் பெரியாண்டியாச்சி அம்மன் கோவில்  ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தங்கராஜ்  திருட சென்றுள்ளார்.

அங்கு கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடுவதற்காக தங்கராஜ் கையே உள்ளே விட்டபோது அவரது கை உண்டியலின் உள்ளே சிக்கிக்கொண்டது. கையை வெளியே எடுக்க நீண்ட நேரமாக முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை.

இதனால் உண்டியலில் கை மாட்டியப்படியே அமர்ந்திருந்தார். மறுநாள் காலை அந்த வழியாக சென்ற ஊர் மக்கள் உண்டியலை திருட முயன்ற தங்கராஜன் கை சிக்கிக் கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தங்கராஜின் கை உண்டியல் உள்ளே சிக்கி இருப்பதை பார்த்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உண்டியலை உடைத்து தங்கராஜின் கையை வெளியே எடுத்தனர். பின்பு போலீசார் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருந்தது தெரியவந்தது.

அதனால் தங்கராஜ் மீது திருட்டு வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.