ஆந்திரா துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், அல்லூரி சீதாராமராஜு மாவட்டம், தும்பிரிகுடா மண்டலத்தில் உள்ள பேடபாடு கிராமத்திற்குச் சென்றபோது, பலர் காலணிகள் இல்லாமல் நடக்கின்றதை காண்பது அவரது மனதைக் கலங்கச் செய்தது. குறிப்பாக பாங்கி மித்து என்ற மூதாட்டி  வெறும் காலில் நடந்து செல்வதைக் கண்ட பவன் கல்யாண், உடனடியாக கிராமத்தின் மக்கள் தொகை குறித்து கேட்டு, 350 பேர் வாழ்கிறார்கள்  என்பதை அறிந்து, அனைவருக்கும் செருப்புகள் வாங்கி வழங்க உத்தரவிட்டார். சில மணிநேரங்களில் செருப்புகள்  கிராமத்தில் உள்ள பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் வழங்கப்பட்டது.

 

இது குறித்து பேசும் கிராம மக்கள், “பவன் சார் எங்களுடைய வலிகளை உணர்ந்தார், எங்களுக்காக நேரில் வந்து கவலைப்பட்டார்,” எனக் கூறினர். இதுவரை எந்த அரசியல்வாதியும் எங்களை நேரில் வந்து பார்க்கவோ, எங்க பிரச்சனைகளை கேட்கவோ இல்லை என தெரிவித்தனர். அரக்கு மற்றும் தும்பிரிகுடா பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதார சிக்கல்களை நேரில் அறிய இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த பவன் கல்யாண், தன் மகன் சிங்கப்பூரில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த காரணத்தால், ஏப்ரல் 9-குள் தனது பயணத்தை முடித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.