
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் சிவந்திபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கரிசல்குளம் கிராமத்தில் 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களாக இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அறிந்த போலீசாரும் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
தங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். மோட்டார் பழுது என கூறி குடிநீர் வினியோகம் தடை செய்யப்படுகிறது. குடிநீர் வினியோகம் செய்யாததால் மிகவும் சிரமப் படுகிறோம் என மக்கள் கூறினார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.