
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பதோஹி என்ற மாவட்டத்தில் துலாபூர் பகதூரன் கிராமத்தில் திருமண விழா நடைபெற்று உள்ளது. இதில் மணமகன் சுதாமா கௌதம் குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் அங்கு தனது இரண்டு நண்பர்களுடன் வந்த சச்சின் பிண்ட் என்ற இளைஞர் மணமகன் மீது திராவகத்தை ஊற்றினார். இதில் மணமகனும் அவருடன் குதிரை வண்டியில் அமர்ந்திருந்த இரண்டு சிறுவர்களும் பலத்த காயமடைந்த நிலையில் உடனே அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் அவர்கள் 3 பேரும் நேற்று சிக்கினர். அவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை செய்த போது, சம்பவத்தில் ஈடுபட்ட சச்சின் மணமகளை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் திருமணத்தை நிறுத்தும் நோக்கத்தில் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மணமகன் மீது திராவகம் வீசியதாகவும் ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.