
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவருடைய இயக்கத்தில் இறுதியாக வெளியான விடுதலை 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார். அதே சமயம் கேஜிஎப் திரைப்படத்தை மையமாக வைத்து ஒரு திரைப்படத்தை அவர் இயக்க உள்ள நிலையில் அந்தப் படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படியான நிலையில் வெற்றிமாறன் தான் சிகரெட் பழக்கத்தை நிறுத்தியதற்கான காரணம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அதில், நான் 13 வயது இருக்கும் போதே சிகரெட் பிடிக்க ஆரம்பித்து விட்டேன். ஒரு நாளைக்கு 150 முதல் 180 சிகரெட்கள் வரை பிடித்துக் கொண்டிருந்தேன். அப்படி இருந்த நான் ஒரு படம் பார்த்த பிறகு சிகரெட் பிடிப்பதை அப்படியே நிறுத்தி விட்டேன். சூர்யாவின் வாரணம் ஆயிரம் திரைப்படத்தை பார்த்த பிறகு நான் சிகரெட் பிடிப்பதை அடுத்த நாளே நிறுத்தி விட்டேன். என் கூட படம் பார்த்த எல்லோரும் சிகரெட் பிடிக்க ஆரம்பிக்கல, அதே மாதிரி என்னுடன் படம் பார்த்த எல்லோரும் சிகரெட் பிடிப்பதை விடவில்லை. ஒவ்வொருவருக்கும் அவர்கள் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதன்படி தான் செயல்பட முடியும். நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என வெற்றிமாறன் பேசியுள்ளார்.