மகாராஷ்டிராவின் பீட் மாவட்டம், அம்பாஜோகாய் தாலுகாவின் சங்காவ் கிராமத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது மாநிலம் முழுவதும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பாஜோகாய் அருகே உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றும் ஞானேஷ்வரி அஞ்சன் என்ற இளம்பெண் அங்குள்ள கோவிலில் இருந்து வரும் ஓசையால் அவதிப்பட்டு போலீசில் புகார் அளித்ததற்காக, கிராம சபையின் சற்பஞ்ச் மற்றும் அவரது கூட்டத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டதாக புகார் கூறியுள்ளார்.

ஏப்ரல் 14ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து ஞானேஷ்வரி கூறும்போது, “கோவிலில் இருந்து வரும் மிகுந்த ஒலி காரணமாக நான் தலைவலியில் மிகவும் பாதிக்கப்படுகிறேன். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்ததும், சற்பஞ்ச் என்மீது பழிவாங்கும் நோக்கத்தில் என் வீட்டருகே மூன்று மாவு அரைக்கும் இயந்திரங்களை நிறுவினார். இதனால் என் உடல்நிலை மேலும் மோசமானது. நான் நேரில் சென்று விசாரித்தபோது, அவர் மற்றும் அவரது கூட்டத்தினர் பைப் கொண்டு என்மீது தாக்குதல் நடத்தினர்” என தெரிவித்தார்.

 

இந்த தாக்குதலால் அவர் முதுகுப் பகுதியில் பலத்த அடிப்பட்டுள்ள காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவரது காயங்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பரவி, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி மற்றும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்குப்பின் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், ஞானேஷ்வரி, “எனக்கு தற்போது வரை எப்போதும் FIR நகல் தரவில்லை” என்கிறார். இது போலீசாரின் அலட்சியத்தை சுட்டிக்காட்டுகிறது.

இச்சம்பவம் ஒரு சட்டத்துறையைச் சேர்ந்த பெண் மீது ஆணாதிக்கம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் எப்படி வெளிப்படுகிறது என்பதை காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். “ஒருவர் தனது நலனுக்காக புகார் கொடுத்தாலுமே தாக்குதல் நடத்துவது எந்த ஜனநாயகத்துக்கும் எளிதல்ல” என வலியுறுத்தி வருகின்றனர்.

 

மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.