கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொடிக்களம் கிராமத்தை சேர்ந்த சக்திவேலு நந்தினி தம்பதியினருக்கு வினித் என்ற 6 வயது மகனும் தர்ஷன் குமார் என்ற ஒரு மாத கைக்குழந்தையும் உள்ளது. சக்திவேல் மாலத்தீவில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் குழந்தைகளுடன் நந்தினி வீட்டில் வசித்து வருகின்றார். இந்த நிலையில் நந்தினியை நேற்று காலை தனது கைக்குழந்தையை வீட்டின் முன் பகுதியில் தூங்க வைத்துவிட்டு வீட்டு தோட்டத்திற்கு சென்று வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த நந்தினி ஓடி வந்து பார்த்தபோது குழந்தையின் அருகே தெருநாய் ஒன்று நின்று கொண்டிருந்தது. குழந்தை கழுத்தில் காயத்துடன் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்ததைக் கண்டு பதறிய நந்தினி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்து விட்டது.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து போன குழந்தையின் கழுத்தை கயிற்றால் இருக்கிறது போல காயம் இருந்தது. மேலும் நாய் கடித்து குதறியதற்கான எந்த தடயங்களும் உடலில் இல்லாததால் குழந்தையின் சாவில் சந்தேகம் உள்ளது எனவும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் நாய் கடித்து இறந்ததா அல்லது குழந்தை கொலை செய்யப்பட்டதா என்று தெரியவரும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.