
காரைக்குடியை பூர்வீகமாகக் கொண்ட சார்பானந்த மகன் ஸ்ரீ ராம் பெரம்பலூர் முத்துநகர் பகுதியில் கடந்த ஓர் ஆண்டாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். தனது தாய் ஆனந்தியுடன் அவர் அங்கு வசித்து வந்த நிலையில் திருச்சியில் புகைப்படக்காரராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக இவர்கள் வசித்து வந்த வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்த நிலையில் அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அழுகிய நிலையில் கிடந்த ஆனந்தி உடலில் துணி போர்த்தப்பட்டு தர்ப்பை புல், எலுமிச்சை பழம், ஆரஞ்சு பழம், தேங்காய் மற்றும் மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு உள்ளிட்ட சமையல் பொருட்கள் போடப்பட்டிருந்தது. அதே சமயம் ஸ்ரீராம் குமார் படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்தார். உயிரிழந்த தாய் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்துவிட்டு மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.