பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அருண்குமார்(50) என்பவர் சென்னையில் இருக்கும் ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் நித்திஷ்(22) சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் அருண்குமார் தனது மகனை சென்னையில் உள்ள ஜவுளி கடையில் வேலைக்கு சேர்த்து விட நினைத்தார். இதனால் நேற்று முன்தினம் இரவு தனது மகன் நித்திஷை அழைத்துக் கொண்டு சேலம்-சென்னை எழும்பூர் ரயிலில் முன்பதிவுல்லா பெட்டியில் பயணம் செய்துள்ளார்.

அந்த ரயில் அயோத்தியாபட்டணம்- மின்னாம்பள்ளி இடையே சென்று கொண்டிருந்த போது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த நித்தீஷ் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அருண்குமார் உடனடியாக அபாய சங்கிலி பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி பயணிகள் உதவியுடன் தனது மகனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.