திருச்சியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அதிமுக கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். அதாவது 2026 தேர்தலில் வெற்றிக்கான வியூகத்தை வகுக்கும் விதமாக கள ஆய்வில் ஈடுபடுமாறு மேலிட உத்தரவு போட்டிருந்த நிலையில் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தங்கமணி ஆகியோர் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தான் இன்று அதிமுக கள ஆய்வு நடைபெற்றது.

அப்போது தங்கமணி கட்சியை மேம்படுத்துவது மற்றும் 2026 தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் நிர்வாகிகள் தங்களுக்குள் கீழே அமர்ந்து தனியாக பேசிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த தங்கமணி கோபத்தில் நான் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது நீங்கள் கீழே பேசி கொண்டிருப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார். பின்னர் தொடர்ந்து பேசிய அவர், 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கம்.

இதற்காக உங்களுடன் உரையாட வந்துள்ள நிலையில் நீங்கள் கவனமின்றி பொறுப்பு இல்லாமல் உங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இப்படியே இருந்தால் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சியாக தான் இருக்கும். திருச்சியில் கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் யாரை நிறுத்தினாலும் எதிர்ப்பு மட்டும்தான் காட்டுகிறீர்கள்.

முதலில் நமக்குள் ஒற்றுமை வேண்டும். நமக்குள் ஒற்றுமை இல்லாமல் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால்தான் வெற்றி வாய்ப்பை இழந்து நிற்கிறோம். இதே நிலை நீடித்தால் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் நாம் எதிர்க்கட்சியாக தான் இருக்க வேண்டும். நம்முடைய உடம்பில் ஓடுவது அதிமுகவின் ரத்தம். மேலும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கூறினார்.