
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமாக காமெடியை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சிரிக்கோ உதயா. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சினிமாவில் ஒரு சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். குறிப்பாக சந்தானம் படங்களுக்கு பல காமெடிகளையும் இவர் எழுதியுள்ளார். பல வருடங்கள் இவர் சினிமாவில் தென்படாமல் இருந்த நிலையில், சமீபத்தில் இவர் குறித்த ஒரு அதிர்ச்சி அளிக்கும் செய்தி வெளிவந்தது. அதாவது இவருக்கு சர்க்கரை நோய் அதிகமானதால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் காலில் ரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால் இடது கால் முட்டிக்கு கீழ் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிரிக்கோ உதயாவை நேரில் சந்தித்த நடிகர் முத்துக்காளை மற்றும் கிங்காங் ஆகியோர் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கிய நிலையில் நடிகர் TSK அவர்களும் சிரிக்கோ உதயாவை நேரில் சந்தித்து தன்னால் முடிந்த பண உதவியை செய்துள்ளார். இவர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.