
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இந்திய மக்களிடையே பெரும் கோபத்தையும் துயரத்தையும் ஏற்படுத்திய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சி ‘மன் கி பாத்’இல் நாட்டு மக்களுடன் உரையாற்றினார். பஹல்காம் தாக்குதலின் படங்களைப் பார்த்த ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது என்றும், இந்த தாக்குதல் பயங்கரவாதிகளின் கோழைத்தனத்தை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் வலியுறுத்தினார். காஷ்மீரில் அமைதி நிலவத் தொடங்கியதும், சுற்றுலா வளர்ச்சி வேகமெடுத்ததும் பயங்கரவாத சக்திகளுக்கு ஏற்றதாக இல்லாததால், அவர்கள் இந்த கொடூரத் தாக்குதலை நடத்தினர் என அவர் குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடி மேலும் கூறுகையில், “இந்த தாக்குதலுக்குப் பிறகு முழு நாடும் ஒரே குரலில் பேசுகிறது. உலகத் தலைவர்களும் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்து, ஆதரவு தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதை நிச்சயமாக உறுதி செய்கிறேன். சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்,” என்றார்.
இந்த நேரத்தில் மன உறுதியை வலுப்படுத்த வேண்டும் என்றும், நாட்டு மக்களின் ஒற்றுமைதான் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவின் மிகப்பெரிய பலமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். “காஷ்மீரை மீண்டும் அழிக்க நினைத்த பயங்கரவாத சக்திகளை நம்மால் முறியடிக்க முடியும்,” என உறுதியுடன் கூறிய பிரதமர், நாட்டின் ஒற்றுமையும் உறுதியும் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.