சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பாக நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டு பேசினார். அப்போது, யார் என்ன வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளட்டும் எதையும் நாம் கட்டுப்படுத்த வேண்டாம். எங்கள் நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கலாச்சாரம் உள்ளது. மொழி இருக்கின்றது, அதுதான் எங்களுடைய அடையாளம். எங்கள் தமிழ்நாட்டுக்கு அடையாளம் தமிழ்த்தாய் தான், தமிழ் மொழி தான். ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பு கடைபிடிக்கப்பட்ட ஒரு மொழிக்கு எவ்வளவு வலிமை இருந்திருக்கும்.

அப்பேர்ப்பட்ட மொழி இன்று தமிழக முதல்வரின் பார்வையில் உள்ளது. என்ன நடந்தாலும் சரி மொழிக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று அவர் சொன்னது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் நெகிழ வைத்துவிட்டது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூத்த மகனாக முதல்வர் ஸ்டாலின் உள்ளார். வெற்றி திருமகள் முதலமைச்சர் ஸ்டாலினை எந்நேரமும் பற்றிக் கொண்டிருக்கிறாள் என்பது நன்றாக தெரிகின்றது. வருகின்ற தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக வெல்லும் என்று வடிவேலு தெரிவித்துள்ளார்.