
சென்னையின் அண்ணாசாலை பகுதியில் பிரியாணிக்கு பணம் கேட்டதற்காக கடை உரிமையாளரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாம்பஜார் பகுதியில் பாஸ்புட் கடை நடத்தி வரும் முகமது நவ்ஷாத் என்பவர் கடைக்கு வந்த பிரசன்னா உள்பட மூன்று பேர் பிரியாணிவாங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால், அவர்கள் அதற்கான பணத்தை கொடுக்க மறுத்துள்ளனர். பணம் கேட்ட நவ்ஷாதை மூவரும் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. தாக்குதலில் காயமடைந்த நவ்ஷாத், ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தாக்கியவர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட மூவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.