
மத்திய மோட்டார் வாகன விதிப்படி இனி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவ சான்றிதழ் பெற்ற பிறகு தான் ஓட்டுனர் உரிமம் பெற முடியும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே சாரதி மென்பொருளை இனி பயன்படுத்தி விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவ சான்றிதழை மின்னணு மூலமாக மட்டுமே பதிவேற்றம் செய்ய இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் அணுகி தங்களுடைய விண்ணப்ப பதிவு எண்ணை கொடுத்து மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும். பரிசோதனைகள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் விண்ணப்பதாரரின் மருத்துவ சான்றிதழ்களை மருத்துவர் நேரடியாக ஆன்லைன் மூலம் சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மருத்துவரின் அங்கீகாரம் பெற்ற பிறகு தான் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் லைசன்ஸ் பெற முடியும் என அரசு விளக்கமளித்துள்ளது.