
சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலக குடோன் கட்டுப்பாட்டாளருக்கு கடந்த 14-ஆம் தேதி இ-மெயில் வந்தது. அந்த மெயிலில் மூன்று இடங்களில் விபத்து நடத்த 8 பேர் சேர்ந்து சதி திட்டம் தீட்டி இருக்கிறோம். உயர் அதிகாரிகளின் பதிலுக்காக காத்திருக்கிறோம். என்னை தொடர்பு கொண்டு எனக்கு தேவையான பணத்தை கொடுத்து விட்டால் நாச வேலை திட்டத்தை நான் உடனே கைவிட்டு விடுவேன் என அந்த இ-மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் மிரட்டல் இமெயில் அனுப்பியவர் ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ஜெயராம் என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. ஜெயராம் ஒரு வணிக வளாக கம்ப்யூட்டர் பில்லிங் பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் பகுதியை நேரமாக கார் ஓட்டும் வேலையும் பார்த்து வந்தார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ஜெயராம் பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கியுள்ளார். ஒரு கடனை அடைக்க அடுத்த கடன் என 11 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்துள்ளார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயராம் பணத்திற்காக இ-மெயில் மூலம் மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.