பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இந்த வெப்ப அலையினால் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக சிந்து மாகாணத்தில் 50 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்ப அலை நிலவுகிறது. இங்கு கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கிறது.‌

அதோடு அங்கு அடிக்கடி மின்வெட்டும் ஏற்படுகிறது. இதன் காரணமாக அரசாங்கம் தேவையில்லாமல் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் கடும் வெப்பத்தினால் ஏராளமான முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நீரிழப்பு, மூச்சு திணறல் மற்றும் காய்ச்சல் போன்றவைகளால் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 நாட்களில் மட்டும் சிகிச்சை பலனின்றி 568 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சுகாதாரத்துறை அவசரநிலை பிரகடனப்படுத்தியுள்ளது.