தஞ்சாவூர் மாவட்டத்தில் ராசா மிராசுதார் மருத்துவமனை உள்ளது. இது நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மருத்துவமனை ஆகும். அங்கு கடந்த 25ஆம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு அனுமதிக்கப்பட்ட 54 நோயாளிகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் விபத்தில் நோயாளிகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 31 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்ற தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி டிஸ்சார்ஜ் செய்ய சொல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தீ மற்றும் புகை மண்டலத்திற்குள் போராடி 50க்கும் மேற்பட்ட நோயாளிகளை காப்பாற்றிய தற்காலிக பணியாளர்கள் 31 பேர் புகையை சுவாசித்ததால் அவர்களின் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்‌. மேலும் இருவர் மிகவும் மோசமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை பெற்று வருகின்றனர்.