சென்னையில் கிருஷ்ணன்-தக்ஷனா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக கட்டிட வேலைக்காக சென்னைக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு சுருதி ‌(5), ரிஷி (7) ஆகிய இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த குழந்தைகள் இருவரும் நேற்று மாலை கட்டிடத்திற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணன் தன்னுடைய குழந்தைகளை அழைப்பதற்காக வெளியே சென்றுள்ளார்.

அப்போது ஸ்ருதியை காணவில்லை. இதைத்தொடர்ந்து கட்டிடம் முழுவதும் சிறுமியை தேடினர். அப்போது ஒரு நீர்த்தேக்க தொட்டியில் சிறுமி கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் கட்டிடத்தின் உரிமையாளர் ரூபா ராம் சவுத்ரி உட்பட, காண்ட்ராக்டர் ஜெய்சங்கர், உதவி காண்ட்ராக்டர் ரவி ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.