
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி நாட்டார் குடி கிராமத்தில் சந்திரசேகர் மற்றும் முருகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். சந்திரசேகர் கோயம்புத்தூரில் பேக்கரி ஒன்றில் வேலை பார்க்கும் போது அங்கு தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய மஞ்சு என்பவரை வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் மஞ்சு கர்ப்பமாக இருந்த நிலையில் நாட்டார் குடிக்கு வந்துள்ளனர்.
போக்குவரத்து வசதி இல்லாததால் சிறிது காலம் சிவகங்கை அண்ணாமலை நகரில் குடியிருந்தனர். பிறகு அங்கிருந்து நாட்டார் குடிக்கு மீண்டும் வந்தனர். நான்கு மாதங்களுக்கு முன்பு சிவகங்கை அரசு மருத்துவமனையில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் கடந்த மே 21 ஆம் தேதி இவர்களின் குழந்தை கட்டைப்பையில் அய்யனார் கோவில் அருகே கண்டெடுக்கப்பட்டது.
இறந்த குழந்தையை சந்திரசேகர் தனது தாயுடன் சேர்ந்து புதைத்த நிலையில் போலீசார் பிறகு நடத்திய விசாரணையில் குழந்தை கொலை செய்யப்பட்டது. அதாவது குழந்தை சற்று சிவப்பாக இருந்த நிலையில் சந்திரசேகர் மஞ்சு மீது சந்தேகப்பட்டு குழந்தையை தூக்கி வீசி உள்ளார். மஞ்சுவும் இது உன்னுடைய குழந்தை தான் என்று கூறி குழந்தையை தூக்கி வீச இவ்வாறு இருவரும் மாறி மாறி தூக்கி வீசியதால் குழந்தை இறந்துள்ளது. பிறகு குடும்பமே சேர்ந்து நாடகமாடி குழந்தையை புதைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மஞ்சு என்பது அவருடைய உண்மையான பெயர் இல்லை எனவும் ஷாலினி என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றிய போது அங்கு எதிரில் பேக்கரியில் வேலை பார்த்த சந்திரசேகர உடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாற திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
பிறகு இருவருக்கும் இடையே நாளடைவில் சண்டை ஏற்பட தென்காசி அருகே மற்றொரு நபரை மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள ஷாலினி திட்டமிட்டு இருந்த நிலையில் குழந்தையை தூக்கி வீசிவிட்டு சென்றதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சந்திரசேகர், அவருடைய தாயார் மற்றும் ஷாலினி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.