திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு(37). இவரது மனைவி சரண்யா. கடந்த 2021-ஆம் ஆண்டு பெங்களூரில் வேலை பார்த்த போது பிரபுவுக்கும் சக ஊழியர்களான சசிகுமார், உதயகுமார் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்காக பிரபு 40 லட்ச ரூபாய் பணத்தை சசிகுமார் உதயகுமார் ஆகியோரிடம் கடனாக வாங்கியுள்ளார். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பெங்களூரில் இருந்து வெளியேறிய பிரபு நண்பர்களுக்கு தெரியாமல் தண்டையார்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.

இதனை அறிந்த சசிகுமார், உதயகுமார் அவரது நண்பர்களான ஜெகதீஷ், யோகேஸ்வரன் ஆகியோர் பிரபுவின் வீட்டிற்கு சென்றனர். பின்னர் பிரபு, சரண்யா ஆகியோரை காவல் நிலையத்திற்கு வருமாறு காரில் ஏற்றி கிண்டியில் இருக்கும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பிரபுவிடம் பணம் கேட்டு மிரட்டியதால் சரண்யா தனது மாமனாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியுள்ளார். அவர் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தனது மகனை கடத்தி சென்றதாக புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் கிண்டி ஹோட்டலுக்கு விரைந்து சென்று உதயகுமார், சசிகுமார் உள்பட நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.