திருநெல்வேலி மாவட்டம் கருங்காடு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண், தனது குடும்ப சூழ்நிலையை விவரித்து அதற்கான தீர்வு காண மாவட்ட நிர்வாகத்தை நாடி வந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவொன்றை அளித்த மகாலட்சுமி, பின்னர் செய்தியாளர்களிடம் தனது துயரத்தைக் கூறியபோது, குடும்பத்தில் மூத்த சகோதரர் மனநல பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது சகோதரருக்கு நீரிழிவு காரணமாக சிறுநீரகம் செயலிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தனது கணவர் ஆனந்தராஜ் ஒரு விபத்தில் காயமடைந்து கை, கால்கள் செயலிழந்த நிலையில் உள்ளதாகவும் கூறினார்.

தற்போது, இந்த மூன்று பேரையும் தனக்கு கிடைக்கும் வருவாயில் காப்பாற்றி வருவதாக கூறிய மகாலட்சுமி, அவர்கள் அவதியுறும் நிலையில் சிகிச்சையோ, உதவியோ கிடைக்காததால், அவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதி அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பிறகாவது, உரிய தொண்டு நிறுவனங்களில் சேர்த்து சிகிச்சை பெறும் வழிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடு மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.