விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முட்டத்தூரில் குழந்தை வரம் வேண்டி பரிகாரம் செய்வதாக கூறி மர்ம நபர்கள் ஒரு பெண்ணின் 5 பவுன் தாலி சங்கிலியை ஏமாற்றி எடுத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து கடந்த 22-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்திய போது மோசடியில் ஈடுபட்டது வேலூர் மாவட்டம் காட்பாடி திருவலம் கிராமத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள்(46), அவரது மகன் வல்லரசு(22) என்பது தெரியவந்தது.

முதலில் வள்ளியம்மாள் தேன் விற்பது போல வந்து வீட்டை நோட்டமிட்டு வீட்டில் குழந்தை இல்லாதவர்கள் பற்றிய தகவலை தெரிந்து கொண்டார். அதன் பிறகு தனது மகன் வல்லரசு என்பவரிடம் கூறி சம்பந்தப்பட்ட வீட்டிற்கு மறுநாள் சென்று சாமி பரிகாரம் செய்வது போல நாடகமாடி தங்க சங்கிலியை ஏமாற்றி சென்றது தெரியவந்தது.

இதனால் வள்ளியம்மாள், அவரது மகன் வல்லரசு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து 5 பவுன் தாலி சங்கலியை மீட்டனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.