
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு தரவேண்டிய கல்விக்கான நிதியை தராமல் மத்திய அரசு இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் மத்திய கல்வி அமைச்சரின் இந்த கருத்துக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவது மட்டுமல்லாமல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். நிதியை வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலினும் கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் இது குறித்து பேசி உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், கல்விக்கு நிதி வாங்க முடியாமல் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் இவர்கள் வீட்டிற்கு முன்பு நின்று கோலம் போட்டு போட்டோ எடுத்துக் கொண்டிருக்கின்றன. கோலப் போட்டி நடத்தி வருகிறார்கள். கல்விக்கு நிதி பெற்று தர முடியாத முதல்வர் ஸ்டாலின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ராஜினாமா செய்கிறேன் என்று அறிவிக்க தயாரா என்று ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற முடியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்கு செல்லுங்கள், ஏன் நாடாளுமன்றத்திற்கு செல்கிறீர்கள்? நேரில் பிரதமரை சந்தித்து போராடி வாங்க வேண்டிய நிதியை முதலமைச்சர் அமர்ந்து கொண்டு கண்ணீர் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். மக்கள் வாக்குகளை பெற எத்தனை நாடகங்களை திமுக மக்கள் மத்தியில் அரங்கேற்றப் போகின்றது என விமர்சித்துள்ளார்.