வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தர்களால் பரவலாக பயணிக்கப்படும் இடமாக இருக்கிறது. இங்கு கோயில் அருகே பல துறவிகள் மற்றும் ஆதரவற்ற முதியோர் தங்கி இருப்பது வழக்கம்.

இந்நிலையில், ஒரு பார்வை குறைபாடுள்ள 80 வயது மூதாட்டி யாரோ சிலர் கொண்டு வந்து கோயில் வாசலில் கைவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதி மக்கள் மூதாட்டியிடம் விசாரித்த போது, அவர் ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை சேர்ந்த ஜெயலட்சுமி என்றும், தனது கணவர் இறந்துவிட்டதால் வாரிசுகள் இல்லாமல் உறவினர்கள் வீட்டில் தங்கி இருந்ததாகவும் கூறியுள்ளார்.

ஜெயலட்சுமி கூறியதாவது, “நான் பல ஆண்டுகளாக ஊரில் குறிசொல்லி வந்தேன். எனது கணவர் இறந்துவிட்டார். எனக்கு வாரிசுகள் இல்லை. எனவே உறவினர்கள் என்னை வாலாஜா முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.

ஆனால் அந்த முதியோர் இல்லம் மூடப்பட்டதால், மீண்டும் உறவினர்கள் வீட்டுக்குச் சென்றேன். அவர்கள் என்னை ஏற்க மறுத்து வள்ளிமலை கோயில் வாசலில் கொண்டு வந்து விட்டுச்சென்றனர்” என்றார்.

இதனை கேட்ட அப்பகுதி மக்கள் மிகுந்த இரங்கலையும் கோபத்தையும் வெளிப்படுத்தினர். இளைஞர்கள் இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது வைரலாகி வருகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் வள்ளிமலை கோயில் பகுதியில் தொடர்ந்து நடைபெறுவதால், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பலரும் தங்களது குடும்பத்தில் உள்ள முதியோர்களை பராமரிக்காமல், வள்ளிமலை கோயில் அருகே கைவிட்டு செல்வது ஒரு பழக்கமாகி விட்டது என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.