தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் எம்பி ஆகியுள்ளார். அந்த தொகுதியில் கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கனிமொழி நேற்று கலைஞர் நினைவிடத்தில் வெற்றி சான்றிதழை வைத்து வணங்கினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் பாஜகவிற்கு இடமில்லை. இங்கு  தாமரை மலராது என்பதை தமிழக மக்கள் தெளிவு படுத்திவிட்டனர். அண்ணாமலை அடிக்கடி என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்பார். அவர் கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்பார்.

ஆனால் தற்போது மக்கள் என்னை 2-வது முறையாக தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த தகுதி கூட இல்லாத ஒருவர் பாஜக கட்சியின் தலைவராக நீடிப்பது நல்லது கிடையாது என்று கூறினார். இது தொடர்பாக அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் என்னுடைய தந்தை முதலமைச்சரோ அல்லது எம்எல்ஏவோ கிடையாது. என் தந்தை குப்புசாமி ஆடுதான் மேய்த்தார். அவர் என்னிடம் பொறுமையாக செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். ஒருவேளை கனிமொழி பாஜகவில் இணைந்தால் நான் பதவி விலகுவது குறித்து நிச்சயம் பரிசீலனை செய்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் கனிமொழி பாஜகவில் இணைந்தால் நான் பதவி விலகுவேன் என்று அண்ணாமலை கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.