பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய நிலையில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று சொந்த மண்ணிலேயே பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி வருவதாக கூறப்படும் நிலையில் கடந்த டி20 உலகக்கோப்பை போட்டியிலும் லீக் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியதால் அந்த அணி மீது பல்வேறு சர்ச்சைகள் குவிந்து வருகிறது.

இது பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது பாக். முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா ஒரு முக்கிய விஷயத்தை கூறியுள்ளார். அதாவது 2024 ஆம் ஆண்டு இந்திய அணியில் ராகுல் டிராவிட் இருந்தார். அவர் இந்திய அணியை வலுப்படுத்தினார். தற்போது அந்த அணியை வலுப்படுத்த மிகவும் வலிமையான பயிற்சியாளரான கம்பீர் இருக்கிறார். அவர் ஒரு அற்புதமான வீரர். கம்பீர் எப்போதும் முன்வைத்த காலை பின் வைப்பதே கிடையாது. மேலும் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் இப்படி உறுதியான முடிவுகளை எடுக்கக்கூடிய வலுவான நபர் தான் தேவை என்று கூறியுள்ளார். அதாவது கம்பீர் போன்ற ஒருவரால் தான் பாகிஸ்தான் அணியை காப்பாற்ற முடியும் என்று அவர் கூறியுள்ளார்.