சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தமிழக-கர்நாடகா எல்லையில் அடிப் பாலாறு ஓடுகிறது. இந்த பகுதியில் பாலாறு காவிரி ஆற்றுடன் இணைகிறது. இந்த பகுதியில் கொளத்துரை சேர்ந்த மீனவர்களான ராஜா, ரவி, இளையபெருமாள் உள்பட  4 பேர் பரிசில் ஒன்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் மறுநாள் காலை மான் வேட்டையிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து துப்பாக்கி சூடு நடத்தியதில் ராஜா மீது குண்டு பாய்ந்துள்ளது. மற்றவர்கள் ஆற்றில் குதித்து தப்பி ஓடிவிட்ட நிலையில் ராஜாவின் கதி மட்டும் என்ன என்று தெரியாமல் இருந்தது. இந்த பகுதி கர்நாடக வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் வனவிலங்குகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.‌‌

அதன் பிறகு போலீசார் மற்றும் வனத்துறையினர் உதவியுடன் ராஜாவை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை அடியாறு வழியாக உள்ள காவிரி ஆற்றில் ராஜாவின் உடல் மிதந்து வந்துள்ளது. துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 4 நாட்கள் ஆன நிலையில் தற்போது ராஜா சடலமாக மீட்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தின் காரணமாக கர்நாடகா மற்றும் தமிழக எல்லையில் இரு மாநில போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.‌ தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக-கர்நாடகா எல்லையில் தற்காலிகமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக மீனவர் ராஜா உயிரிழந்த விவகாரத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள செய்து குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக மீனவரை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து தமிழக அரசு தண்டனை பெற்று தர வேண்டும். உயிரிழந்த மீனவர் ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதோடு 50 லட்சம் ரூபாய் நிதி உதவியும் கொடுக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு அமைதி காப்பது சரியில்ல என்று கூறியுள்ளார்.