அறுவை சிகிச்சையின் அதிசயமாக, பிரிட்டனில் முதன்முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது 36 வயதான கிரேஸ் டேவிட்சனுக்கு, அவரது 42 வயதான சகோதரி ஏமி புர்டி தனது கருப்பையை தானமாக வழங்கினார். இந்த அறுவைச் சிகிச்சை 2023ல் வெற்றிகரமாக நடைபெற, அதன் பிறகு கிரேஸுக்கு IVF மூலம் உருவாக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட எம்.பிரியோக்கள் பயன்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து 2024 பிப்ரவரி 27ஆம் தேதி, லண்டன் குயின் சார்லட் & செல்சியா மருத்துவமனையில், 2 கிலோ எடையுடன் “ஏமி இசபெல்” என பெயரிடப்பட்ட பெண் குழந்தை பிறந்தது.

கிரேஸ், மிகவும் அபூர்வமான Mayer-Rokitansky-Küster-Hauser (MRKH) சிண்ட்ரோம் என்ற நிலைக்கு உட்பட்டவர். இது 5,000 பெண்களில் ஒருவருக்கு காணப்படும் நிலையில், கருப்பை முற்றிலும் இல்லாமலோ, வளர்ச்சி அடையாமலோ இருப்பதற்கான காரணமாகும். 19வது வயதில் இந்த நிலை கண்டறியப்பட்ட கிரேஸ், தாயாக முடியாது என்பதே தன் வாழ்நாள் பயமாக இருந்தது. ஆனால், மருத்துவ முன்னேற்றத்தின் மூலம் அந்த கனவு நிஜமாகி, இன்று தாயாக உள்ளார்.

இந்த சாதனையின் பின்னணி, கடந்த 25 ஆண்டுகளாக கருப்பை மாற்று அறுவைசிகிச்சை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட ப்ரொஃபசர் ரிச்சர்ட் ஸ்மித் மற்றும் அவருடைய குழுவிற்கு செல்லும். “இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் கருப்பை மாற்றமல்ல, ஒரு குழந்தையை பெற்றெடுப்பதே” என அவர் கூறுகிறார்.

தற்போது வரை ஒரு உயிருடன் இருக்கும் தானதாரரிடமிருந்து (living donor) ஒரு மாற்று மற்றும் மூன்று மரணம் அடைந்த தானதாரர்களிடமிருந்து (deceased donor) மாற்றுகள் நடைபெற்றுள்ளன. இவர்களில் அனைவரும் உடல்நலமாகவும், இயல்பான கருப்பை செயல்பாட்டோடும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இது உலகம் முழுவதும் குழந்தைக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு புதிய நம்பிக்கை ஒளியாக அமைந்துள்ளது.