திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் பைபாஸ் ரோட்டில் முட்புதரில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்த மர்ம நபர் பற்றி விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் சேலம் மாவட்டம் தலைவாசலை சேர்த்த விக்னேஷ் என்பவர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

திருமணமாகாத விக்னேஷ் ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று கொத்தனார் வேலை பார்த்து வந்தார். அப்போது திருச்சியில் யாசகம் வாங்கி பிழைப்பு நடத்தி வந்த பெண்ணுடன் விக்னேஷ்க்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்தார். விக்னேஷுடன் நெருங்கி பழகியதால் அந்த பெண் கர்ப்பமானதாக தெரிகிறது. இதனால் கருக்கலைப்பு செய்வதற்கு விக்னேஷிடம் அந்த பெண் 13,000 ரூபாய் பணம் கேட்டுள்ளார்.

அந்த பணத்தை கொடுத்த பிறகு விக்னேஷுடன் பேசுவதை அந்த பெண் நிறுத்திவிட்டார். இதனால் கோபமடைந்த விக்னேஷ் நிஜமாகவே கர்ப்பமாக இருக்கிறாயா? கருவை கலைக்க பணம் வாங்கிய பிறகு ஏன் என்னிடம் பேசவில்லை என கேட்டு தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த விக்னேஷ் சேலையால் கழுத்தை இறுக்கி அந்த பெண்ணை கொலை செய்து உடலை முட்புதரில் வீசி சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.