தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜீவா. இவர் சமீபத்தில் வெளியான வாழ்க்கை வரலாற்று படத்தில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் ஜீவா கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதாவது சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் கலைஞர் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை நேரில் சென்று நடிகர் ஜீவா பார்வையிட்டார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.‌ அவர் பேசியதாவது, நான் சினிமாவில் கலைஞரைப் பற்றி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த கண்காட்சியை பார்க்கும் போது அவர் சினிமாவை தாண்டி முதல்வராக செய்துள்ள விஷயங்களை பார்க்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது என்று கூறினார். அப்போது அவரிடம் நிருபர்கள் கலைஞரின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுத்தால் அதில் நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கலைஞரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நிச்சயம் நான் நடிப்பேன் என்று கூறினேன். அதோடு அந்த படத்தை வெப் தொடராக எடுத்தால் சரியான முறையில் இருக்கும் என்றும் கூறினார். மேலும் இதை பா. விஜய் இயக்குவார் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.