
திருமணம் மனிதனின் மன ஆரோக்கியத்துக்கு நல்லது என்ற நம்பிக்கையைத் தொடர்ந்து பலரும் பேசிய வந்த நிலையில், அமெரிக்காவின் ஃப்ளோரிடா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புதிய ஆய்வு, இதை முற்றிலும் மறுக்கும் வகையில் வெளியானது.
இந்த ஆய்வில், திருமணம் செய்யாதவர்களுக்கும், விவாகரத்தானவர்களுக்கும் மனநல குறைபாடான டிமென்ஷியா (மறதி நோய்) ஏற்படும் அபாயம் திருமணமானவர்களைவிட குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
18 ஆண்டுகளாக 24,000 அமெரிக்கர்களை தொடர்ந்து கண்காணித்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், கடந்த 2019ல் வெளியான ‘திருமணமில்லாதவர்கள் டிமென்ஷியா நோயால் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்’ என்ற ஆய்வைக் கூட திருத்துகின்றன.
இந்த ஆய்வைப் பற்றி நரம்பியல் நிபுணர்களான டாக்டர் அவினாஷ் குல்கர்னி, டாக்டர் லவ் பன்சல் மற்றும் டாக்டர் சிவகுமார் ஆகியோர் கருத்து தெரிவிக்கின்றனர். “தனிப்பட்ட வாழ்க்கை முறையிலேயே மூளை ஆரோக்கியத்தின் முக்கிய காரணிகள் இருக்கின்றன.
திருமணத்தின் தரம், அதில் உள்ள மனதளவிலான திருப்தி, அழுத்த நிலை ஆகியவை தான் முக்கியமானவை,” என அவர்கள் கூறுகின்றனர். மேலும், மேற்கத்திய நாடுகளில் திருமணம் இல்லாத வாழ்க்கை அதிக சுதந்திரத்தையும், தனிப்பட்ட வளர்ச்சிக்கும் வாய்ப்பளிக்கிறது என்பதும், அதுவே மூளையின் செயல்பாட்டை பாதுகாக்கக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் விளக்குகின்றனர்.