
தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருள்கள் விற்பனை தொடர்பாக காவல்துறையினர் கண்காணித்து வருவதோடு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரிகளில் வெளியூர்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் தங்கி படிக்கிறார்கள். இவர்களை குறி வைத்து சில கும்பல் போதை பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதாவது ஆன்லைனில் வலி நிவாரண மருந்துகளை வாங்கி அதை போதை மாத்திரைகளாக அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் உயர் ரக போதை பொருட்களை விற்பனை செய்த வெளிநாட்டு பெண் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது காவல்துறையினர் சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகம் படும்படியாக 5 பேர் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போதைப் பொருள்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 200 போதை மாத்திரைகள், 1.400 கிலோ கஞ்சா உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சினேகா ஸ்ரீ, கிருஷ்ணன், முஜிப் ரகுமான், மரியா, யாசிக் இலாஹி என்பது தெரியவந்தது. இதில் மரியா சினிமா துணை நடிகையாக இருக்கிறார். இதேபோன்று யாசிக் இலாஹியும் துணை நடிகராக இருக்கிறார். மேலும் இவர்கள் 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.