மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய கல்வித் தொகையை தான் நாங்கள் கேட்கின்றோம். ஒவ்வொரு வருடமும் கொடுக்கின்றனர். இந்த ஆண்டு கல்வித் தொகையை பெற வேண்டும் என்றால் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும், முன்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்கள்.

மும்மொழி கொள்கைக்கு எதிராகத்தான் தமிழகம் எப்போதும் இருந்துள்ளது. தமிழகத்தில் தமிழ் மொழிக்காக பலரும் உயிர் தியாகம் செய்துள்ளனர். தமிழகத்தில் எப்போதுமே மும்மொழிக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று தெள்ளத் தெளிவாக கூறிவிட்டோம். தமிழர்களின் உரிமையை தான் நாங்கள் கேட்கின்றோம். கல்வி என்பது ஒரு உரிமை. இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய என்ன உள்ளது, யார் அரசியல் செய்கிறார்கள் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.