
சென்னை கொடுங்கையூரில் நந்தினி (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய கணவரை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தன் 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். அவர் தனியாக வசித்து வரும் நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக இன்ஸ்டாகிராமில் மணிகண்டன் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் ஒன்றாக சேர்ந்து பல இடங்களுக்கு சுற்றி திரிந்ததோடு உல்லாசமாகவும் இருந்துள்ளனர். இந்நிலையில் மணிகண்டனின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து பெண் பார்த்துள்ளனர்.
இதனால் அவர் நந்தினியுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் நந்தினி மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். தன்னுடைய கள்ளக்காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெறுவதை நந்தினியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் அவர் தண்டையார்பேட்டையில் உள்ள அவர் வேலை செய்யும் ஐஸ்கிரீம் கடைக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது கோபத்தில் நந்தினி திடீரென தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளித்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உடனடியாக தீயை அணைத்தார். இதில் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக மணிகண்டன் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.