தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் கொரவன் திண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (41). இவர் பாலக்கோடு அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே கோழி இறைச்சி கடை, பழைய இரும்பு கடை நடத்தி வந்துள்ளார்.

முதல் மனைவியை பிரிந்த குமார் பாலக்கோடு எரநல்லி பகுதியைச் சேர்ந்த கோவிந்தம்மாள்(36) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.  இந்த தம்பதியினருக்கு 8 வயதில் மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கோவிந்தம்மாளுக்கும் தனியார் நிதி நிறுவன ஊழியரான நாகராஜ்(27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை அறிந்த குமார் தனது மனைவியை கண்டித்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டபோது கோபத்தில் குமார் கோவிந்தம்மாளை அடித்து துரத்திவிட்டார்.

இதனால் கோவிந்தம்மாள் பாலக்கோடு அண்ணா நகரில் இருக்கும் தனது அக்கா வீட்டில் தஞ்சம் அடைந்தார். கடந்த 9- ஆம் தேதி குமார் கொலை செய்யப்பட்டதால் போலீசார் கோவிந்தம்மாளை பிடித்து விசாரணை நடத்தினார்.

அப்போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது குமாரை கொலை செய்து விட்டால் இரும்பு கடையையும் கோழிக்கடையையும் அபகரித்து நாகராஜுடன் உல்லாசமாக வாழலாம் என கோவிந்தம்மாள் நினைத்துள்ளார்.

மறுநாள் நாகராஜ், அவரது நண்பர்களான ஆனந்தகுமார், தமிழரசன் ஆகியோர் இணைந்து குமாரின் கை கால்களை கயிற்றால் கட்டி போட்டு, முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி, கயிற்றால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கோவிந்தம்மாள், நாகராஜ், ஆனந்தகுமார், தமிழரசன் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.