
தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை அருகே வீரகேளம்புதூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஆமோஸ் (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்ற பெண்ணை காதலித்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஹன்சிகா என்ற இரண்டு வயது பெண் குழந்தை இருக்கிறது.
இவர்கள் குடும்பத்துடன் கடையம் பகுதியில் வசித்து வரும் நிலையில் ஆமோஸ் கட்டிட வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் நேற்று பட்டப் பகலில் ஆமோசை வீடு புகுந்து மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஆமோஸ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் சந்தேகத்தின் பெயரில் அவரது மனைவி நந்தினியிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தது.
அதாவது நந்தினிக்கு அந்தோணி டேனிஸ் என்ற 35 வயது நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கும் நிலையில் இவரிடம் தான் நந்தினியின் கணவர் ஆமோஸ் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இதன் காரணமாக நந்தினி அவரிடம் செல்போனில் பேசும்போது பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் ஆமோசுக்கு தெரிய வரவே அவர் இருவரையும் கண்டித்ததோடு கடந்த இரண்டு மாதங்களாக வேலைக்கும் செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று திடீரென அந்தோணி நந்தினியை பார்க்க வீட்டிற்கு சென்ற நிலையில் அப்போது வெளியே சென்றிருந்த ஆமோஸ் வந்துவிட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. உடனே கோபத்தில் அந்தோணி அரிவாளால் ஆமோசை வெட்டி கொலை செய்துவிட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக அந்தோணி மற்றும் நந்தினி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.