தெலுங்கானா மாநிலம் பதன்செரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட முத்தங்கி கிராமம் அருகே சிறுவனின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதில் அந்த சிறுவனின் பெயர் கர்ரே விஷ்ணுவர்தன் (8) என்பது தெரியவந்தது. இந்த சிறுவனின் தந்தை ராஜு என்ற குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்ட நிலையில் தாயார் அரவணைப்பில் சிறுவன் வளர்ந்து வந்துள்ளான். இந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது சிறுவனை கொலை செய்தது அவருடைய தாயார் சுவாதி (30) என்பது தெரியவந்தது.

சிறுவனின் தாயார் ராஜூ உயிரிழந்ததும் தொந்து அனில்(31) என்பவரை திருமணம் செய்து கொண்டார். அது மட்டுமல்லாமல் அவருக்கு வேறு சில ஆண்களுடனும் தொடர்பு இருந்துள்ளது. இதனிடையே அவருடைய கள்ளக்காதலனுக்கு சிறுவன் இடையூறாக இருந்துள்ளான். இதனால் அவனை கொலை செய்ய தாயார் திட்டமிட்ட நிலையில் கடந்த ஜூன் 10ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில் சிறுவனை தாயார் கொலை செய்துள்ளார்.

அதன் பிறகு தன்னுடைய இரண்டாவது கணவரிடம் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் சிறுவனின் உடலை ஸ்கூட்டியில் எடுத்துச் சென்று இரவு 11.30 மணி அளவில் முத்தங்கி கிராமம் அருகே சாலையில் வீசி விட்டனர். கடந்த 14ஆம் தேதி இரவில் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்த நிலையில் மறுநாள் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதல் தொடர வேண்டும் என்பதற்காக பெற்ற மகனை தாயே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.