தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்த கருத்துக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுக இந்தி திணிப்புக்கு தான் எதிரி. இந்திக்கே எதிரி கிடையாது. ஆனால் மத்திய பாஜக அரசு இந்தி மற்றும் இந்துத்துவாவம்  என்ற அடிப்படையில் இந்திய மொழியை திணித்து சமஸ்கிருதத்தை கொண்டு வருகின்றது.

எழுத்து வடிவம் கூட இல்லாத ஒரு மொழிக்கு கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ் மொழியை புறக்கணிக்கும் செயலை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. இதையெல்லாம் முன்பே கணித்து தான் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் 2006 ஆம் ஆண்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழக அரசு அன்று கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கில் 2006 ஆம் ஆண்டு கருணாநிதி கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதனைத் தொடர்ந்து தான் தமிழகத்தில் எல்லா பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டது. இந்தக் குறைந்தபட்ச அறிவு கூட இல்லாத ஒருவர்தான் பாஜகவின் தமிழக மாநில தலைவராக இருக்கின்றாரா என்பது தான் என்னுடைய கேள்வி. கவுன்சிலர் கூட ஆக முடியாதவர் தான் அண்ணாமலை. அவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை பார்த்து எப்படி ஒருமையில் பேசலாம் என்று தமிழன் பிரசன்னா ஆவேசமாக பேசியுள்ளார்.