
கோவையில் தொண்டாமுத்தூர் தென்கரை பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண்மணி, தனது கணவர் மரணமடைந்த பின் குடும்ப சுமைகளை ஏற்றுக்கொண்டு, இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, “5 ஸ்டார்” எனப்படும் தனியார் நிதி நிறுவனத்திடம் ரூ.4 லட்சம் வீட்டு கடன் பெற்றிருந்தார். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக தவணை தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அந்த நிதி நிறுவனத்தின் ஊழியர்கள், மஞ்சுளாவின் மகன் விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவமதிக்கும் வார்த்தைகளால் பேசி மிரட்டினர். அதுமட்டுமல்லாமல், மார்ச் 23 மற்றும் 24 ஆகிய இரு நாட்களிலும் நேரிலே வீட்டிற்கு வந்து, இரவு 10 மணி வரை வாசலில் அமர்ந்து பணம் செலுத்த அழுத்தம் கொடுத்தனர். இது தனிமையில் வசிக்கும் பெண்ணுக்கு கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தியதுடன், அவரது மகன் விஜய் இந்த சம்பவங்களை வீடியோவாக பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.